புதுடில்லி: சந்திக்காதது ஏன்?… மேகதாது அணை பிரச்சினை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழக முதல்வர் விஜய் தனது டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்பியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற விஜய், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து நிதி ஒதுக்கீடு கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து காங்கிரஸ் தேசிய தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த சந்திப்பும் இன்றி திடீரென சென்னை திரும்பினார். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தேவையற்ற அழுத்தங்களை தவிர்க்க விஜய் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் காங்கிரஸ் தரப்பு, ராகுல் காந்திக்கு நேரமின்மை காரணமாக சந்திப்பு நடைபெறவில்லை என்றும், அடுத்த முறை டெல்லி செல்லும் போது விஜய் அவரை சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பத்திரிகையாளர்கள் பெயரில் வெளியாட்கள் அதிகமாக நுழைந்ததால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியதாக கூறப்படுகிறது.