சென்னை: ‘ஜனநாயகன்’ படம் சமூக கொண்டாட்டமாக வரும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் துவக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் திரைத்துறை மற்றும் அரசியல் தொடர்பான பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகுமா என்ற கேள்விக்கு அவர், “எந்த திரைப்படமும் தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகே முறையாக வெளியாக வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதலமைச்சர் விஜய் மிகவும் எளிமையானவர். பிறந்தநாளை தனிப்பட்ட கொண்டாட்டமாக மாற்றாமல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது, ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்வது போன்ற சமூக பணிகளில் ஈடுபடுகிறார். எனவே அவரது திரைப்படம் வெளியாகுவது ஒரு சமூக கொண்டாட்டமாக இருக்கும்” என்றார்.
படத்தில் ‘தளபதி விஜய்’ என்று வருமா அல்லது ‘முதலமைச்சர் விஜய்’ என்று வருமா என்ற கேள்விக்கு, “நேற்று நடிகர் விஜய், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். நாளை காலம் என்ன தீர்ப்பு தருகிறது என்பதை பார்க்க வேண்டும். எங்களுக்கு அவர் என்றும் தளபதி தான்” என்றார்.
திரையரங்க டிக்கெட் விலை உயர்வு குறித்து, “மக்களுக்கு சுமையாக இல்லாத வகையில் முடிவெடுக்கப்படும். திரைத்துறையின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும்” என்றும் கூறினார்.
நடிகர் விஷால் தன்னை விமர்சித்ததாக கூறப்பட்டதற்கு, “விஷாலை எனக்கு பிடிக்கும். அவருடைய நம்பிக்கையைப் பெறும் வகையில் நல்ல பணிகளைச் செய்து தளபதி பெயரை காப்பாற்றுவேன்” என்று தெரிவித்தார்.