சென்னை: நடிகர் அர்ஜுன் தாஸின் ‘கான்சிட்டி’ படத்தின் புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘கான்சிட்டி’. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் இந்தப் படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
நகரத்தில் வாழும் நடுத்தர குடும்பத்தின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கொண்டாடியது.
இப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் 3வது பாடலான ‘பிராடுபயலே’ வெளியாகியுள்ளது. ‘கான்சிட்டி’ திரைப்படம் ஜூன் 26ம் தேதி வெளியாக உள்ளது.