சென்னை: தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அவகாசம் ஜூன் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1.70 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
மே 3-ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு, ஜூன் 2-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் ஜூன் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்களை ஜூன் 6 வரை பதிவேற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.