பீகார்: பீகாரில் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், 95 வயது மூதாட்டி ஒருவர் தனது உயிரை பொருட்படுத்தாமல் செயல்பட்டு 20-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் 5-வது மாடியில் அமைந்துள்ள ஐசியூ பிரிவில் நேற்று நள்ளிரவு 3.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சுவாசக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 95 வயது ராதா தேவி என்ற மூதாட்டி, அறை முழுவதும் புகை சூழ்ந்ததை கவனித்தார்.
உடனே தனது முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை அகற்றிவிட்டு, கரும்புகையை தாண்டி கீழ்தளத்திற்கு சென்று நர்சுகளிடம் தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்தார்.
மூதாட்டி அளித்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தது. அதிகாரி ராம்நிவாஸ் பாண்டே தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து, ஐசியூவில் இருந்த 15 முதல் 20 நோயாளிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்த போதிலும், ராதா தேவியின் தைரியமான செயலால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.