சென்னை: காவல் நிலைய எல்லையை காரணம் காட்டி பொதுமக்களின் புகார்களை ஏற்க மறுக்கக் கூடாது என்றும், மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
குற்றம் நடைபெற்ற இடம் எந்த காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது என்பது தொடர்பாக சில நேரங்களில் போலீசாரிடையே குழப்பம் நிலவுவதால், பொதுமக்களின் புகார்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல காவல் நிலையங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய சூழலும் உருவாகிறது. இந்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “பொதுமக்கள் எந்த காவல் நிலைய எல்லையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வழிப்பறி, விபத்து அல்லது வேறு ஏதேனும் குற்ற சம்பவம் தொடர்பாக அளிக்கப்படும் புகார்களை உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
பின்னர் உரிய காவல் நிலையத்திற்கு அந்த புகாரை மாற்றி அனுப்ப வேண்டும். மேலும் புகார்தாரர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்களையும் வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் வாங்க மறுக்கும் போலீசார் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.