புதுடில்லி: அந்தமான் கடல் பகுதியில் புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் அந்தமான் கடலில் புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் புரி வெளியிட்ட அறிக்கையில், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ விஜயபுரம்-3 பகுதியில் இந்த வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
355 மீட்டர் ஆழத்தில் இயற்கை எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 1,900 மீட்டருக்கு மேற்பட்ட ஆழத்தில் நடைபெற்ற ஆரம்பகட்ட சோதனைகளில் தொடர்ந்து எரிவாயு வெளிப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயுவின் தரம் மற்றும் தன்மையை மதிப்பிடுவதற்காக ஆயில் இந்தியா நிறுவனம் மாதிரிகளை சேகரித்து வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல ஆழ்கடல் ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.