கேரளா: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து வயநாட்டில் சுற்றுலா மையங்கள், ஹோம் ஸ்டேக்கள் மற்றும் ரிசார்ட்டுகளை இரண்டு நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கினாலும், கேரளாவில் தொடங்குவதையே அதிகாரப்பூர்வமாக பருவமழை தொடக்கம் என கருதுகின்றனர்.
இந்த ஆண்டு எல்நினோ தாக்கம் காரணமாக பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. முன்கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் 4-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன் காரணமாக கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழைக்கான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் நாளை மற்றும் ஜூன் 7-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு சுற்றுலா மையங்கள், ஹோம் ஸ்டேக்கள் மற்றும் ரிசார்ட்டுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வயநாட்டில் இரண்டு நாட்களுக்கு குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.