நியூயார்க்: டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதிரடி மற்றும் பிரம்மாண்ட காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் பிரபலமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான ஸ்பைடர்மேனாக நடிகர் டாம் ஹாலண்ட் முதன்முதலாக ‘ஸ்பைடர்மேன்: ஹோம் கம்மிங்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து வெளியான ‘ஸ்பைடர்மேன்: பார் ப்ரம் ஹோம்’ மற்றும் ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படங்களும் உலகளவில் மாபெரும் வெற்றியைப் பெற்றன.
இந்த வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் உருவாகியுள்ளது. டெஸ்டின் டேனியல் இயக்கியுள்ள இப்படத்தில் டாம் ஹாலண்டுடன் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிசா காலோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகள், நவீன தொழில்நுட்ப காட்சியமைப்புகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை அம்சங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த டிரெய்லர், மார்வெல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
Movie