கெய்ரோ: ஹோர்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்குமான ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் எட்டப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘‘ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் நெருங்கியுள்ளது. அதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தம் விரைவில் நடக்கலாம். நாளையோ அல்லது அதற்கு அடுத்த நாளோ ஒப்பந்தம் எட்டப்படலாம்” என்றார்.ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையால் நேற்று எண்ணெய் விலைகள் சற்று குறைந்தன. சர்வதேச அளவுகோலாக கருதப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று காலை 1.2 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய்க்கு 78.43 அமெரிக்க டாலராக இருந்தது.
ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்ற நம்பிக்கை அதிகரிருந்திருந்தபோதிலும், அந்த பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. செங்கடலில் வாஃபா என்ற சவுதி எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டது. ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுக்கள் தெரிவித்துள்ளன.
