சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குனராக தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ், நடிகராக புதிய பரிமாணம் எடுத்துள்ள ‘டி.சி.’ திரைப்படம் முதல் நாளில் ரூ.5.70 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ளார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம், நாடு முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட காட்சிகளில் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. முதல் நாளில் இந்தியாவில் ரூ.4.70 கோடி வசூல் செய்ததாகவும், உலக அளவில் கூடுதலாக ரூ.1 கோடி வசூலித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதல் நாள் மொத்த வசூல் ரூ.5.70 கோடியாக அமைந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. வன்முறை நிறைந்த ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இயக்குனராக பல வெற்றிகளை பதிவு செய்த லோகேஷ் கனகராஜ், நடிகராக அறிமுகமானுள்ள நிலையில், படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
