சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டு மற்றும் மின்விநியோக பிரச்சினைகளை சமாளிக்க, கூடுதல் களப்பணியாளர்கள், மின்மாற்றிகள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புகார் தீர்வு மற்றும் பேட்டரி மின்சார சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகம் முழுவதும் தினமும் சுமார் 30 ஆயிரம் மின்சாரப் புகார்கள் பெறப்படுவதாகவும், அவற்றை விரைவாக கையாள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
18 ஆயிரம் பணியாளர்கள்
மின் பழுதுகளை விரைந்து சரிசெய்யும் வகையில் 18 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், மின்விநியோகம் இருக்கும் நிலையிலும் பழுதடைந்த அல்லது அதிக சுமையை தாங்க முடியாத நிலையில் உள்ள மின்மாற்றிகளை கண்டறிந்து மாற்றும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அடுத்த கட்டமாக ஆயிரக்கணக்கான மின்மாற்றிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளன. மின் தேவையை சமாளிக்க புதிய துணை மின் நிலையங்களும் படிப்படியாக அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்த திட்டம்
மின்சாரம் உற்பத்தியாகும் நேரத்தில் அதை சேமித்து வைத்து, தேவை அதிகரிக்கும் நேரத்தில் பயன்படுத்தும் வகையில் Battery Energy Storage திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் அதிகமாக கிடைக்கும் நேரங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து, உச்ச மின் தேவையின் போது பயன்படுத்துவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் கொள்கை அக்டோபரில் வெளியிடப்படும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் அதிகபட்ச மின் தேவை சுமார் 26 ஆயிரம் மெகாவாட் அளவை எட்டும் நிலையில், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மின் உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
