திருவனந்தபுரம்: அரசு போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் வகையில், கேரளத்தில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து பேருந்துகளை ஸ்பான்சர் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அங்கமாலியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதிய பேருந்து வாங்குவதற்காக கே.எஸ்.ஆர்.டி.சி.க்கு ரூ.40 லட்சம் வழங்கியுள்ளார். கே.எஸ்.ஆர்.டி.சி. வரலாற்றில் தனிநபர் ஒருவர் பேருந்து வாங்குவதற்காக நிதியுதவி செய்வது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி, கூட்டுறவு வங்கிகள், அறக்கட்டளைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மூலம் புதிய பேருந்துகளை வாங்க நிதியுதவி பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை ஏற்று எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகேயுள்ள மூக்கன்னூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோஸ் ரூ.40 லட்சத்தை வழங்கியுள்ளார். ஹீ-மேன் ஆட்டோ ரோபோ பார்க் நிறுவனத்தை நடத்தி வரும் அவர், திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் வி.டி.சதீசனிடம் காசோலையை வழங்கினார்.
அதிரப்பள்ளிக்கு புதிய இணைப்பு
தான் வழங்கிய நிதியில் வாங்கப்படும் பேருந்து அங்கமாலி பணிமனையில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்றும், பிரபல சுற்றுலாத்தலமான அதிரப்பள்ளியை தென் கேரள மாவட்டங்களுடன் இணைக்கும் வகையில் அதன் வழித்தடம் அமைய வேண்டும் என்றும் ஜோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி.ஜான், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி எம்.ஜான், கே.எஸ்.ஆர்.டி.சி தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் டாக்டர் பிரமோஜ் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனிநபரின் இந்த நிதியுதவி பொதுப் போக்குவரத்து சேவைக்கு மக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
