ஏனாம்: கோதாவரி ஆற்றில் கிடைக்கும் அரிய வகை புலசா மீனுக்கு இந்த ஆண்டு ஏனாம் பகுதியில் அதிகபட்சமாக ரூ.27 ஆயிரம் விலை கிடைத்துள்ளது. மழைக்காலத்தில் மீன் வரத்து கடுமையாக குறைந்துள்ள நிலையில், ஒரு மீனுக்கே இவ்வளவு விலை கிடைத்திருப்பது உணவுப் பிரியர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் புலசா மீனுக்கு தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக கோதாவரி ஆற்றில் குறிப்பிட்ட காலகட்டத்தில் கிடைக்கும் இந்த மீனுக்கு ஆண்டுதோறும் அதிக தேவை இருக்கும்.
சமீபத்தில் கவுதமி கோதாவரி ஆற்றில் சுமார் 1.3 கிலோ எடையுள்ள புலசா மீன் ஒன்று மீனவர் வலையில் சிக்கியது. அது ஏனாம் மீன் ஏல மையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ரூ.26 ஆயிரத்தில் தொடங்கி ரூ.27 ஆயிரத்தில் முடிந்தது
முதற்கட்ட ஏலத்தில் அந்த மீன் ரூ.26 ஆயிரத்துக்கு கோட்டிபள்ளியைச் சேர்ந்த மீனவர் மல்லாடி சத்யநாராயணாவால் வாங்கப்பட்டது. பின்னர் அவர் ரூ.1,000 லாபம் வைத்து அதனை ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த ஆண்டு ஏனாம் பகுதியில் ஒரு புலசா மீனுக்கு கிடைத்த அதிகபட்ச விலை ரூ.27 ஆயிரமாக பதிவாகியுள்ளது.
மழைக்காலம் என்பதால் கோதாவரியில் புலசா மீன்களின் வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே புலசா மீன்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
வரத்து குறைவு… விலை உயர்வு
பொதுவாக ரூ.14 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை விற்பனையாகும் புலசா மீன், வரத்து குறைந்ததால் தற்போது ரூ.27 ஆயிரம் வரை சென்றுள்ளது.
புலசா மீனின் சுவை மற்றும் குறைந்த கால வரத்து காரணமாக அதற்கு ஆண்டுதோறும் அதிக கிராக்கி நிலவுகிறது. மீன் வரத்து மேலும் குறைந்தால் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக உள்ளூர் மீன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
