அயோத்தி: ராமர் கோவில் நன்கொடை வசூலில் முறைகேடு தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோவில் நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக கடந்த ஜூன் மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு விசாரணைக் குழு, கோவில் ஊழியர்கள் உட்பட 8 பேரை கைது செய்தது.
இதையடுத்து நன்கொடை எண்ணும் பணியில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அறக்கட்டளை அறிமுகப்படுத்தியுள்ளது.
நன்கொடைகளை எண்ணும் ஊழியர்கள் இனி பாக்கெட்டுகள் இல்லாத சீருடைகளை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நன்கொடை எண்ணும் மையத்தில் அனைத்து கோணங்களையும் கண்காணிக்கும் வகையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதுவரை 45 நாட்கள் மட்டுமே சேமிக்கப்பட்டு வந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் இனி 180 நாட்கள் வரை சேமிக்கப்படும். எண்ணும் மையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் ஊழியர்களிடம் தீவிர சோதனையும் நடத்தப்பட உள்ளது.
மேலும், நன்கொடை எண்ணும் பணியில் ஒப்பந்த ஊழியர்களுக்குப் பதிலாக நிரந்தர ஊழியர்களை நியமிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
