ரியாத்: சவுதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சவுதி அரேபியாவின் தாயிப் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
4 நர்சுகள் பலி
உயிரிழந்தவர்களில் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஜெய்சிமோல் மேத்யூ மற்றும் ஜோபினா ஜானி ஆகியோரும், தமிழகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி ஜெகதீஷ் மற்றும் ஹெப்சிபா தேவமணி ஆகியோரும் அடங்குவர். காரை ஓட்டி வந்தவர் சவுதி நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நான்கு பெண்களும் தாயிப் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் நர்சுகளாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. விடுமுறை நாளில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சவுதி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
