சென்னை: லோகேஷ் கனகராஜ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘டிசி’ திரைப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ராகா ஆஃப் ரிவெஞ்’ இசை எப்படி உருவானது என்பதை இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வாமிகா கபி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்ததாக ரசிகர்கள் பாராட்டினர்.
இதுகுறித்து பேசிய அனிருத், ‘ராகா ஆஃப் ரிவெஞ்’ பாடலை தனிப்பாடலாக உருவாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் டிரெய்லரை சமர்ப்பிக்க வேண்டியிருந்த நிலையில், அதற்கு இன்னும் 48 மணி நேரமே இருந்ததாகவும், உடனடியாக பின்னணி இசையமைக்கத் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.
டிரெய்லரை பார்த்தபோது இந்தியத்தன்மை அதிகம் வெளிப்பட வேண்டும் என்று நினைத்ததாகவும், தென்னிந்திய தாளகதியுடன் இந்துஸ்தானி பாணியிலான குரலிசையை இணைக்க முடிவு செய்ததாகவும் அனிருத் தெரிவித்தார்.
இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு இசை மரபுகளை ஒரே இசைக்கோர்வையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். முதலில் தென்னிந்திய பீட்டை உருவாக்கி, அதன் பின்னணியில் வடஇந்திய இசைக்கூறுகளை இணைத்ததாகவும் விளக்கினார்.
