தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை உமா சங்கரி. தற்போது புற்றுநோய் சிகிச்சையை எதிர்கொண்டு வரும் அவர், தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சுமித்ராவின் மகளான உமா சங்கரி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ‘வீரநடை’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், ‘வானவில்’, ‘கடல் பூக்கள்’, ‘தென்றல்’, ‘கோவை பிரதர்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் மரகதம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார். திருமணத்துக்குப் பிறகு சினிமா மற்றும் சின்னத்திரையில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில், தனக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இந்தத் தகவல் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது தீபாவளி நாளில் தனது தாய், கணவர் மற்றும் உறவினர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்திருக்கட்டும் என்று வாழ்த்துச் செய்தியும் பதிவிட்டுள்ளார்.
சிகிச்சைக்கு மத்தியிலும் குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடியிருக்கும் அவரது புகைப்படம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவருக்கு தொடர்ந்து ஆதரவும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
சிகிச்சையில் இருந்து விரைவில் மீண்டு வந்து மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
