மணிலா: இந்தியாவிடம் இருந்து மேலும் பிரம்மோஸ் ஏவுகணைத் தொகுதிகளை வாங்க பிலிப்பைன்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கில்பர்டோ தியோடோ, இந்திய அதிகாரிகளிடம் கூடுதல் ஏவுகணைகள் தொடர்பான விருப்பப் பட்டியலை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது பாதுகாப்பு பேச்சுவார்த்தை நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற அவர், இந்தியாவிடம் ஏற்கெனவே வாங்கியுள்ள பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். பிலிப்பைன்ஸ் தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதில் இந்த ஏவுகணைகள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு ஏற்றுமதிப் பொருளாக உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் மூன்று பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்காக 18.9 பில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோ மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பிலிப்பைன்ஸ் தீவுகள் நிறைந்த நாடாக இருப்பதால் ஏவுகணை அமைப்புகளை எடுத்துச் செல்வதிலும் பராமரிப்பதிலும் சவால்கள் இருப்பதாக அந்நாட்டு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்நாட்டின் புவியியல் சூழலுக்கு ஏற்ப கூடுதல் மாற்றங்களுடன் ஏவுகணை அமைப்புகளைப் பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
