ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதல் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக புதிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது. அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு நம்பகமான உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யாவுக்கான ஈரான் தூதர் வெளியிட்ட தகவலில், ஈரான் தரப்பின் முக்கிய பாதுகாப்பு நிலைப்பாடுகள் ரஷ்யாவிடம் எடுத்துரைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகளின்போதும் தாக்குதல்கள் நடைபெற்றதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கா முன்பு அளித்த உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மீண்டும் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்பதற்கான நம்பகமான உத்தரவாதம் தேவை என்றும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நாடுகள் தூதரக முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய கிழக்கில் நிலவும் இந்த மோதல் சர்வதேச எரிசக்தி சந்தை மற்றும் கப்பல் போக்குவரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உலக நாடுகள் நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
