ஜப்பானின் மத்திய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஷிசுவோகா மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாலை 1.04 மணியளவில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சாலைகளில் சிதறின. கட்டிடங்களில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். அவ்வாறு வெளியேறியபோது படிக்கட்டுகளில் தவறி விழுந்தவர்கள் உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐச்சி, ஷிசுவோகா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. ஹமாமட்சு, கியோட்டோ, நாரா உள்ளிட்ட நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ரயில் போக்குவரத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களில் மீண்டும் வலுவான நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நிலச்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் போன்ற அபாயங்கள் குறித்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
