நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி அறிவித்த புதிய திரைப்படமான ‘சண்டியர்’ படத்தின் தலைப்பு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
23 ஆண்டுகளுக்கு முன்பு இதே பெயரில் திரைப்படம் உருவானபோது ஏற்பட்ட எதிர்ப்புகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
கமல்ஹாசனின் புதிய படத்தை இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பின்னணி மற்றும் சமூக ரீதியான தாக்கம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இந்த தலைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘சண்டியர்’ என்ற பெயர் தென் மாவட்டங்களில் சாதி மோதல்களையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கூறியுள்ளார். எனவே கமல்ஹாசன் இந்தப் பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக முதல்-அமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் தலையிட்டு கமல்ஹாசனுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். படத்தின் பெயரை மாற்றாமல் தயாரிப்பு தொடர்ந்தால் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று எச்சரித்துள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டிலும் கமல்ஹாசன் தனது படத்துக்கு ‘சண்டியர்’ என்று பெயர் வைத்திருந்தார். அப்போது அந்தப் பெயருக்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரில் படத்தின் பெயர் ‘விருமாண்டி’ என மாற்றப்பட்டது. பின்னர் அந்தப் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது அதே பெயரை மீண்டும் கமல்ஹாசன் பயன்படுத்தியிருப்பது பழைய விவாதத்தை உயிர்ப்பித்துள்ளது. படக்குழு இதுவரை தலைப்பு தொடர்பான சர்ச்சைக்கு இறுதி முடிவை அறிவிக்கவில்லை.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தலைப்பைச் சுற்றி உருவாகியுள்ள இந்தப் பரபரப்பு கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
