வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பிற விசா வைத்திருப்பவர்களுக்கான Form I-539 மற்றும் Form I-765 ஆகிய இரண்டு முக்கிய விண்ணப்பப் படிவங்களின் புதிய பதிப்புகள் செப்டம்பர் 15 முதல் கட்டாயமாகின்றன.
Form I-539 என்பது தற்காலிக விசா நிலையை நீட்டிக்க அல்லது மாற்றுவதற்கான விண்ணப்பமாகும். H-4 விசா பெற்ற துணைவர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் இந்தப் படிவத்தைப் பயன்படுத்துகின்றனர்.
Form I-765 என்பது அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான Employment Authorization Document எனப்படும் வேலை அனுமதி அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பமாகும். குறிப்பிட்ட தகுதியுள்ள H-4 விசா வைத்திருப்பவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
செப்டம்பர் 15-ம் தேதி முதல் புதிய 09/15/26 பதிப்பு படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. பழைய பதிப்புகளுக்கு இந்த முறை சலுகைக் காலம் வழங்கப்படாது. செப்டம்பர் 15 அல்லது அதற்குப் பிறகு பழைய படிவங்களில் விண்ணப்பித்தால் அவை நிராகரிக்கப்படும்.
எனவே, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் சரியான புதிய படிவப் பதிப்பைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
