சண்டிகர்: பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் பா.ஜ.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இதில் ஏ.பி.வி.பி. சார்பில் போட்டியிட்ட அங்கித் பிதான் 3,149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மியின் மாணவர் அமைப்பான ஏ.எஸ்.ஏ.பி.யின் அடில் பிரார் 512 வாக்குகள் குறைவாகப் பெற்றார். இதன் மூலம் பஞ்சாப் பல்கலைக்கழக வரலாற்றில் ஏ.பி.வி.பி. தொடர்ந்து இரண்டாவது முறையாக மாணவர் சங்கத் தலைவர் பதவியை கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தத் தேர்தலில் சிரோமணி அகாலி தளத்தின் மாணவர் அமைப்பு ஆதரவு அளித்தது. இதனால், வரும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கூட்டணி குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.
