இந்தூர்: முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், நிதியுதவி வழங்குவதாகவும், தொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாகவும் கூறி ஆன்லைன் மூலம் பணமோசடி செய்ததாக மத்திய பிரதேச போலீசில் 6 புகார்கள் பதிவாகியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் பொதுமக்களை ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், முதல்வர் ஜோசப் விஜய்க்கு சொந்தமான அறக்கட்டளை நிர்வாகிகள் என கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறு தொழில் தொடங்க நிதியுதவி வழங்குவதாகவும், குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகவும் அந்த கும்பல் ஆசைவார்த்தை கூறியுள்ளது. பின்னர் பதிவு கட்டணம், சரிபார்ப்பு கட்டணம், செயலாக்க கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூலித்துள்ளது.
ஒவ்வொருவரிடமும் ரூ.1,000 முதல் ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் பெற்ற பின்னர் நிதியுதவியும் வழங்காமல், கடனும் பெற்றுத் தராமல் அந்த கும்பல் தொடர்பை துண்டித்துள்ளது.
இதுகுறித்து இந்தூர் போலீசில் கடந்த மாதம் 6 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் தன்டோடியா தெரிவித்தார்.
இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
