கோவை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், வருவாயைப் பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற 110 நாட்களில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விமர்சித்தார். தமிழக அரசுக்கு ஏற்கெனவே அதிகளவில் கடன் உள்ள நிலையில், பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் இருப்பதாகக் கூறிய பழனிசாமி, தற்போதைய அரசு வருவாயைப் பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிக்கவில்லை என்றார். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகளில் பணம் கைப்பற்றப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய அவர், இதுபோன்ற நிலையில் தூய்மையான ஆட்சி என எப்படி கூற முடியும் என்றும் விமர்சித்தார்.
மேலும், த.வெ.க.வினர் ‘ரீல்ஸ்’ போட்டே அரசியலை நடத்துகின்றனர் என்றும், அவர்களிடம் ‘ரியல்’ எதுவும் இல்லை என்றும் பழனிசாமி கிண்டலாகக் கூறினார். விஜய் பிரதமராக மட்டுமல்ல, அமெரிக்க ஜனாதிபதியாகக்கூட ஆகட்டும்; ஆனால் ‘ரீல்ஸ்’ மூலம் ஆட்சியை நடத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பழனிசாமியை முன்னாள் அமைச்சர் வேலுசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி அவரை வரவேற்க வரவில்லை.
