சென்னை: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் வளைந்து, குனிந்து பேச வேண்டிய நிலை இருக்கக்கூடாது என்றும், அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி பேசும் வகையில் மைக் அமைக்க வேண்டும் என்றும் சபாநாயகர் பிரபாகர் உத்தரவிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் இருக்கைகளுக்கு முன்பாக மைக் மற்றும் தொடுதிரை கணினிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் மைக் கேபிள் சிறியதாக இருப்பதால், சில உறுப்பினர்கள் மைக்கை முகத்துக்கு நேராக வைத்து பேச முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மனிதர்கள்-வனவிலங்குகள் மோதலைத் தவிர்ப்பது தொடர்பான கேள்விக்கு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பதில் அளித்தபோது, அவரது மைக் உயரம் குறைவாக இருந்ததால் பேசுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதை கவனித்த சபாநாயகர் பிரபாகர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வளைந்து அல்லது குனிந்து மைக்கில் பேசும் நிலை இனி இருக்கக்கூடாது என்றும், ஒவ்வொரு உறுப்பினரின் உயரத்துக்கு ஏற்ப மைக்கை அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“எம்.எல்.ஏ.க்கள் நெஞ்சை நிமிர்த்தி பேசுவதற்கு வசதி செய்து தர வேண்டும்” என்ற அவரது கருத்தை ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
