சென்னை: தமிழகத்தில் திட்டப் பகுதிக்கு வெளியே உள்ள நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கான அனுமதி நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில் நகர ஊரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
வீட்டுவசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தாக்கல் செய்த மசோதாவில், நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்கள் நகரத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, நில மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற வளர்ச்சியின் அளவும் சிக்கல்களும் அதிகரித்துள்ள நிலையில், முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்பதற்கும் தொடர்ச்சியான கவனம் செலுத்துவதற்கும் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம் என அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, நகர்ப்புற மேம்பாட்டுக் குழுமங்களுக்கு முழுநேரத் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலரை நியமிக்கவும், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்பை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியரை உறுப்பினராகத் தொடரச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது திட்டப் பகுதிக்கு வெளியே நில மேம்பாட்டுக்கு உள்ளாட்சி அமைப்பு, நகர ஊரமைப்பு இயக்குநரின் முன் அனுமதியைப் பெற வேண்டும். நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலும் பெற வேண்டியுள்ளது.
இந்த நடைமுறையால் அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதைத் தவிர்க்க, திட்டப் பகுதிக்கு வெளியே நன்செய் நில மேம்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்கி, உள்ளாட்சி அமைப்புக்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை நகர ஊரமைப்பு இயக்குநருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
