கம்பம்: மேகமலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த நில அளவீடு மற்றும் சர்வே பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேகமலையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிட்டு அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து வனப்பகுதிகளை அளவீடு செய்வதற்காக, கலெக்டர் வைத்திநாதன் உத்தரவின்பேரில் வனத்துறை, நில அளவைத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் மேகமலை பகுதியில் சர்வே பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே, சர்வே நடைபெறும் பகுதிகளில் நிலவும் சூழலை உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மாநில காவல்துறை தலைமையகத்துக்கு அவசர அறிக்கை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சர்வே பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, மேகமலை பகுதியில் நில அளவீடு செய்யும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
