சென்னை: 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்றும், அதற்கு த.வெ.க. உடன்படாவிட்டால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் அமைச்சரவையில் நீடிக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். இந்தப் பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் சிங்கம், யானை, நரி ஆகியவற்றை வைத்து ஒரு குட்டிக்கதையை பதிவிட்டு, இரு தரப்பினரும் புரிந்துகொண்டதாக மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள், முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்போது மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் விஜய்யை தனியாக சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.
கூட்டணி ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை யாரும் வெளியிட வேண்டாம் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்திருப்பதை அவர்கள் விஜய்யிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொண்ட விஜய், கூட்டணி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
