சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மழை வாய்ப்பு
இன்று (7-ந்தேதி) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் 9-ந்தேதி
நாளை (8-ந்தேதி) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
9-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே நாளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
செப்டம்பர் 7 முதல் 11-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. எனினும் சில இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.
இந்த காலகட்டத்தில் உள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே காணப்படும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
