சென்னை: தமிழக பாஜகவின் மேலிடப் பொறுப்பாளராக தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான புதிய மேலிடப் பொறுப்பாளர்கள், இணைப் பொறுப்பாளர்களை கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்துக்கான மேலிடப் பொறுப்பை ராம் மாதவ் ஏற்கிறார். அவருக்கு உதவியாக நிர்மல் குமார் சுரானா மற்றும் டி.கே. அருணா ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த அரவிந்த் மேனன், உத்தராகண்ட் மாநில இணைப் பொறுப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். இணைப் பொறுப்பாளராக இருந்த சுதாகர் ரெட்டியும் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவராக இருந்த வானதி சீனிவாசன், தமிழக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆந்திர மாநில இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய செயலாளர் ம. வெங்கடேசன் கேரள மாநில இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளதாக ஆகாஷ்வாணி செய்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கட்சியின் அமைப்பு மற்றும் அரசியல் பணிகளை ஒருங்கிணைப்பதில் புதிய பொறுப்பாளர் ராம் மாதவின் பங்கு கவனம் பெறுகிறது. இந்த நியமனங்களின் தொடர்ச்சியாக மாநில அளவில் கட்சி நிர்வாகத்தில் மேலும் என்ன மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
