சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுவதாக தெரிவித்துள்ளார்.
14 முறை ஆட்சேபனை
தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக 14 முறை முறையான ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், SIR நடவடிக்கைகள் மற்றும் வாக்காளர் தரவு நிர்வாகம் உள்ளிட்ட விவகாரங்கள் இதில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தை முன்வைத்து திருமாவளவன், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தீவிரமான கவலைகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
SIR குறித்து விமர்சனம்
SIR நடவடிக்கையால் வாக்காளர்களின் பெயர் நீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதேநேரத்தில், தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகளுக்கு விளக்கம் அளித்து வருகிறது.
குறிப்பாக படிவம் 6 தொடர்பாக தேர்தல் ஆணையம், அசல் படிவத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும், கூடுதலாக ‘இணைப்பு டி’ என்ற அறிவிப்பு படிவம் பெறப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
