கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சிக்கு சென்றபோது, அவரது வாகனத்தை கருப்புக்கொடி ஏந்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமித்ஷா நேற்று கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்தார். மதியம் சுமார் 2.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் ஆசிராமம் மைதானத்தில் வந்து இறங்கிய அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார்.
அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி சில இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென சாலையில் வந்து கருப்புக்கொடிகளை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமித்ஷா சென்ற கார் சில நிமிடங்கள் சாலையில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உடனடியாக போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அமித்ஷா குண்டரா பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், மாலை கருணாகப்பள்ளியில் நடைபெற்ற மாதா அமிர்தானந்தமயி தேவியின் பிறந்தநாள் விழாவிலும் அவர் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
