மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் சரிந்த நிலையில், ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பில் சுமார் ரூ.8.9 லட்சம் கோடி குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை வர்த்தகம் தொடங்கிய முதலே சந்தையின் முக்கிய குறியீடுகள் சரிவை சந்தித்தன. நிப்டி 23,000 என்ற முக்கிய ஆதரவு நிலையை இழந்தது.
வர்த்தக முடிவில் நிப்டி 360 புள்ளிகள், அதாவது 1.56 சதவீதம் சரிந்து 22,780 புள்ளிகளில் நிலைபெற்றது. சென்செக்ஸ் 1,124 புள்ளிகள், அதாவது 1.52 சதவீதம் சரிந்து 72,772 புள்ளிகளில் முடிவடைந்தது.
ரியல் எஸ்டேட், வங்கி, ஆட்டோமொபைல், எஃப்.எம்.சி.ஜி., ஸ்மால்கேப், மிட்கேப் உள்ளிட்ட பெரும்பாலான துறை குறியீடுகளும் சரிவை சந்தித்தன.
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க வட்டி விகிதம் தொடர்பான எதிர்பார்ப்புகள் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
