கேரளா: கேரளாவில் 60 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வரும் 80 வயது விவசாயி, இதுவரை சுமார் ரூ.2 கோடி வரை லாட்டரிக்காக செலவு செய்துள்ளதாக கூறப்படும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டம் கரிவெல்லூர் அருகே பாலக்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். விவசாயம் செய்து வரும் இவர், 1967-ம் ஆண்டு முதல் லாட்டரி சீட்டுகளை வாங்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
ஆண்டுகள் கடந்தாலும் லாட்டரி வாங்கும் பழக்கத்தை அவர் கைவிடவில்லை. ஒருநாள் பெரிய பரிசு கிடைத்து வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து சீட்டுகளை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக விவசாய நிலம் மற்றும் மனைவியின் நகைகள் உள்ளிட்டவற்றையும் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பல்வேறு லாட்டரிகளில் சேர்த்து சுமார் ரூ.2 கோடி செலவு செய்துள்ள போதிலும், அவருக்கு பெரிய பரிசுகள் கிடைக்கவில்லை.
சில நேரங்களில் மட்டுமே கிடைத்த பரிசுகளும் ஆயிரக்கணக்கான ரூபாய் அளவிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் சுமையையும் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் லாட்டரி மீதான நம்பிக்கையை அவர் கைவிடவில்லை. இதுவரை வாங்கிய பழைய லாட்டரி சீட்டுகளை வீட்டில் பாதுகாத்து வைத்துள்ளார். அவரது வீட்டில் சுமார் 5 மூட்டைகள் நிறைய பழைய லாட்டரி சீட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
