வாஷிங்டன்: அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் சூழலில் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவை ஈரான் அமெரிக்காவிடம் மத்தியஸ்தர்கள் மூலம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. அமெரிக்கா ராணுவ அழுத்தத்தை குறைத்து, ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தளர்த்தினால், ஒரு வாரத்துக்குள் ஜலசந்தியை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடி உடன்பாட்டுக்கு பதிலாக கடுமையான பொருளாதார அழுத்தத்தை தொடரும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். நவம்பர் மாத அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பிறகு பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்படலாம் என அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக இருப்பதால், அதன் செயல்பாடுகள் தொடர்பான எந்த மாற்றமும் சர்வதேச எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
இதனால் அமெரிக்கா–ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, ஜலசந்தியின் நிலை மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரம் ஆகியவை சர்வதேச அளவில் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றன.
