மிசோரி: வௌவால்களின் வாழ்விடத்தை பாதுகாக்கும் வகையில், முழு வனப்பகுதியையும் அழிக்காமல் குறிப்பிட்ட மரங்களை மட்டும் கட்டுப்படுத்தும் புதிய வனவியல் நுட்பம் அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மார்க் ட்வைன் ஏரியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான இந்தியானா வகை வௌவால்கள் கோடைக்கால வாழ்விடமாகக் கொண்டு வசித்து வருகின்றன. இந்த வௌவால்கள் குகைகளில் மட்டுமல்லாமல், முதிர்ந்த மரங்களின் பட்டை, பிளவு மற்றும் இடுக்குகளையும் தங்குமிடமாக பயன்படுத்துகின்றன.
பல ஆண்டுகளாக முறையான வனப் பராமரிப்பு இல்லாததால், சர்க்கரை மேப்பிள் மற்றும் அயர்ன்வுட் உள்ளிட்ட மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் சூரிய ஒளி வனத் தரையை அடைவது குறைந்ததுடன், வௌவால்களின் இரவு நேர பறக்கும் பாதைகளிலும் அடர்த்தி அதிகரித்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க ராணுவ பொறியாளர் படை மற்றும் தி கன்சர்வேஷன் ஃபண்ட் இணைந்து வனப்பகுதியை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதில் ‘Hack and Squirt’ எனப்படும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட மரங்களின் தண்டுகளில் சிறிய வெட்டுகளை ஏற்படுத்தி, அதற்குள் தாவரக்கொல்லி மருந்து செலுத்தப்படுகிறது. மரங்கள் உடனடியாக வெட்டி அகற்றப்படாமல் இயற்கையாக உலர விடப்படுகின்றன. இதன் மூலம் அவை சில ஆண்டுகளுக்கு வௌவால்களுக்கு தங்குமிடமாக தொடர்ந்து பயன்பட முடியும்.
இந்த முறையின் நோக்கம் வனப்பகுதியை முழுமையாக மாற்றாமல், வௌவால்களுக்கு தேவையான திறந்த பறக்கும் பாதைகளை உருவாக்குவதும், அவற்றின் வாழ்விடத்தை பாதுகாப்பதுமாகும்.
