தெலுங்கானா: தெலுங்கானாவில் தண்டவாளத்தில் புகுந்த ஆடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாதாத்ரி-புவனகிரி மாவட்டம் ஜுலூரு அலிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர். ஆடுகளை பிபிநகர்-காட்கேசர் இடையிலான ரயில் பாதைக்கு அருகே தங்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை அப்பகுதி வழியாக தக்ஷின் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, அதன் சத்தத்தால் அச்சமடைந்த ஆடுகள் தண்டவாளத்தை நோக்கி ஓடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது ரயில் மோதியதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின.
பல ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சில ஆடுகள் காயமடைந்தன. இதனால் ஆடுகளின் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
உயிரிழந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த சில ஆடுகளை அருகில் இருந்த பொதுமக்கள் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தின் அருகே ஆடுகள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன, விபத்துக்கான முழுமையான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
