நிஷின்: நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஜப்பானின் நிஷின் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் வெளியேறினார். வைபவ் சூர்யவன்ஷி 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். அவர் 46 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 8, திலக் வர்மா 2, சிவம் துபே 3, வாஷிங்டன் சுந்தர் 7 ரன்கள் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். 9.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது. அந்த அணியின் 6 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.
இந்திய அணியில் பும்ரா, அக்சர் படேல், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இலங்கை அணியின் 3 வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து சனிக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
