சென்னை: தமிழகத்தில் மழைப்பொழிவு கண்காணிப்பு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்த மேலும் 1,000 தானியங்கி மழைமானிகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழைக்கான பருவகால கண்ணோட்ட மன்றம்-2026 தொடக்க விழாவில் அவர் பேசினார்.
தமிழகத்தில் தற்போது சுமார் 1,400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தானியங்கி வானிலை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இந்த ஆண்டு 1,000 புதிய தானியங்கி மழைமானிகள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையின்போது 2 அடி முதல் 6 அடி வரை தண்ணீர் தேங்கக்கூடிய அதிக மற்றும் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் 1,030 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 1,003 நடுத்தர பாதிப்பு உள்ள இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இடத்திற்கும் வெள்ளத் தடுப்பு, மீட்பு மற்றும் அவசரகால நடவடிக்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை மையம் மூலம் 3 நாட்களுக்கு முன்பே தெரு அளவிலான வெள்ள முன்னறிவிப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென்பகுதிகளில் இயல்பானது முதல் இயல்பை விட அதிகமான மழையும், பிற பகுதிகளில் இயல்பை விட குறைவான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
