மதுரை: மதுரையில் காரில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள திருஞானசம்பந்தர் உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை வண்டியூர் சேட்டு சில்வர் கம்பெனி அருகே உள்ள எட்டையா தோப்பில் இருந்து திருஞானசம்பந்தர் சிலை காரில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுரை-திருமங்கலம் நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 3 அடி உயரம் கொண்ட திருஞானசம்பந்தர் உலோக சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
52 கிலோ எடை கொண்ட அந்த சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதுரை பங்கஜம் காலனியைச் சேர்ந்த ஜெயவேலன், கீழ் அண்ணாதோப்பு பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், நியூ எல்லீஸ் நகரைச் சேர்ந்த அக்பர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிலை 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர காலகட்ட கலைப்பாணியைக் கொண்டதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என்றும் தெரியவந்துள்ளது. சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
