பாரிஸ்: ஆசிரியர் பற்றாக்குறை, பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு இல்லாமை, வகுப்பறைகளில் அதிக மாணவர்கள் இருப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து பிரான்சில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 400 பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிஸ் பகுதியில் தொடங்கிய போராட்டம் பின்னர் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது.

தீ வைப்பு – மோதல்
போராட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் பல பள்ளிகளின் நுழைவாயில்களை மறித்தனர். சில இடங்களில் பள்ளி கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்ததாகவும், ஏராளமானோர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அரசியல் தலையீடு குற்றச்சாட்டு
போராட்டத்தின் பின்னணியில் தீவிர இடதுசாரி அரசியல் ஆர்வலர்கள் இருப்பதாக அரசு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. மாணவர் அமைப்புகள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளன.
கல்வித்துறையின் அடிப்படை வசதிகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கோரி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
