கரூர்: மாயனூர் தடுப்பணை அருகே காவிரி ஆற்றின் நீர் திடீரென பச்சை நிறத்திலும் எண்ணெய் படலம் போன்ற தோற்றத்திலும் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக ஜவுளி சாயப்பட்டறைகள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் இருந்து கழிவுகள் வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆற்று நீரின் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.

நீரின் நிறம் மாறியதற்கான உண்மையான காரணம் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி ஆறு தமிழகத்தின் முக்கிய குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக இருக்கும் நிலையில், நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
