சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் தொடர்ந்து திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
படத்தை பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், இது தனக்கு பெரும் மனநிறைவை அளித்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார். சமூகத்தில் பேசப்படாமல் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை, உணர்வுகள், ஆசைகள், கனவுகள் உள்ளிட்டவற்றை படம் வெளிப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், கீர்த்தி சுரேஷ் ‘டோரதி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுரை கிராமப்புறப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் நட்பு, பாலின அடையாளம், சமூகக் கட்டுப்பாடுகள், வன்முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசுகிறது.
இளையராஜாவின் இசையும் படத்தின் முக்கிய பலமாக பேசப்பட்டு வருகிறது. டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே இயக்குநர் மிஷ்கின், ‘டோரதி’ படத்தின் வெற்றி விழாவில் கார்த்திக் சுப்பராஜின் முந்தைய படமான ‘ரெட்ரோ’ குறித்து தனது தனிப்பட்ட விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார்.
