சென்னை: ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அனைத்து இல்லங்களிலும் பூரி உடன் காலை உணவாக ஒடிசா ஸ்பெஷல் தால் சேர்த்துக் கொள்கிறார்கள். வித்தியாசமான சுவையில் எளிதாக செய்யக்கூடிய இந்த தாலை நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாறலாம். காலை சிற்றுண்டியைச் சிறப்பாக்கலாம்.
தேவையானவை:
கடலைப்பருப்பு – ஒரு கப்
தண்ணீர் – 3 கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – 2 டீஸ்பூன்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் – 2 டீஸ்பூன்
கிராம்பு – 3 – 4
பட்டை – ஒரு சிறிய துண்டு
சீரகம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 4 – 6
பிரிஞ்சி இலை – ஒன்று
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பருப்பை நன்கு கழுவி அதில் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து மிருதுவாக வேகவிடவும் (10 முதல் 12 நிமிடங்கள்). உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிடவும்.
கடாயில் நெய் சேர்த்து சீரகம், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
தேங்காய்ப் பல்லையும் போட்டுப் பொரிக்கவும். இதை வெந்த பருப்பில் போட்டு மேலும் ஒரு நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும். பூரி அல்லது சாதத்துடன் பரிமாறவும். அருமையான ருசியாக இருக்கும்.