நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் மற்றும் நடிகர் போஸ் வெங்கட் ஆகியோர் புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். பெயரிடப்படாத இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படப்பிடிப்பும் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர் பிரேம்ஜி. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான பல படங்களில் இவரது நகைச்சுவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது முழுநீள கதாநாயகனாக புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
2025ஆம் ஆண்டு வெளியான வல்லமை படத்திற்குப் பிறகு முழுநீள கதாநாயகனாக மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இப்படம் கிரைம் திரில்லர் வகையைச் சேர்ந்தது என்பதால், வழக்கமான நகைச்சுவை பாணியிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிரேம்ஜியைப் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் சி.கணேஷ் குமார் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே வல்லமை படத்தில் படத்தொகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் போஸ் வெங்கட், சாஸ்திக், நயனா சாய் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குறிப்பாக அனுபவம் வாய்ந்த நடிகரான போஸ் வெங்கட் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் கூறுகையில், தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பிரேம்ஜி இதுவரை ஏற்றிராத புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்படத்திற்கு சிர்பி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஆர்.ஹரி முருகன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். லாவண்யா அபிராமி அபிராமி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
படத்தின் பெயர், வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட பிரேம்ஜி, இந்த முறை குற்றப் பின்னணி கொண்ட கதையில் எந்த அளவுக்கு வித்தியாசமாக நடிக்கிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
