தமிழ் சினிமாவில் சமீபகாலமாக தனது நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் நடிகர் ரிஷிகாந்த், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தொலைபேசி அழைப்புகளைத் தவறவிடுவதாகச் சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தான் வேண்டுமென்றே யாருடைய அழைப்பையும் தவிர்க்கவில்லை என்றும், ஒருநாளில் சுமார் 300 தொலைபேசி அழைப்புகள் வருவதால் அனைத்தையும் எடுத்து பேசுவது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் வெளியான மோதா ராத்திரி மற்றும் செப்டம்பர் மாதம் வெளியான டொரத்தி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரிஷிகாந்துக்கு நல்ல கவனம் கிடைத்தது. நீண்டகாலமாகத் தமிழ் திரையுலகில் வாய்ப்புகளுக்காகப் போராடி வந்த அவருக்கு இந்தப் படங்கள் திருப்புமுனையாக அமைந்தன.
இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு அதிக அளவில் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர். சமூக வலைதளங்களில் அவரது கைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்த ரசிகர்கள் தொடர்ந்து அழைப்புகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஆரம்பகாலத்தில் திரைப்பட வாய்ப்புகளைத் தேடி வந்தபோது, இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தொடர்புகொள்ளும் வகையில் பேஸ்புக்கில் தனது புகைப்படத்துடன் தொலைபேசி எண்ணையும் பதிவிட்டிருந்ததாக அவர் விளக்கினார். ஆனால், தற்போது அந்தப் பழைய பதிவின் மூலம் எண்ணைக் கண்டறிந்த பலரும் தொடர்ந்து அழைப்பதால் நிலைமை மாறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான அழைப்புகள் வருவதாகவும், சில நாட்களில் சுமார் 300 அழைப்புகள் வரை வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அழைப்புகள்கூட தவறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அழைப்புகளைத் தவறவிட்டதை உணர்ந்தவுடன் அந்த எண்களைக் குறித்துவைத்து ஒவ்வொருவராகத் திரும்ப அழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இயக்குநர் ராஜா கருப்பசாமியின் அழைப்பையும் அவர் தவறவிட்டதாகச் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதையடுத்து இயக்குநர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிஷிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இரும்புத்திரை, சில நேரங்களில் சில மனிதர்கள், செவப்பி, கூலி, மேட் இன் கொரியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரிஷிகாந்த், தற்போது கிடைத்துள்ள வரவேற்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
