வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்துவிட்டதால், அதில் விடுபட்டவர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்று கருதக்கூடாது என உச்சநீதிமன்றம் முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் பெருமளவில் படிவம் 7 தாக்கல் செய்யப்பட்டு வாக்காளர்களின் பெயர்களை நீக்க முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஒரு வாக்காளரின் பெயரை நீக்குவதற்கான எதிர்ப்புத் தெரிவிக்கும் படிவமாக படிவம் 7 பயன்படுத்தப்படுகிறது. இந்தப் படிவங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை மொத்தமாக நீக்க முயற்சிகள் நடைபெற்றதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை அளித்தது. முறைகேடான முறையில் மொத்தமாகத் தாக்கல் செய்யப்பட்ட படிவங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகவும், விதிமுறைகளுக்கு மாறான விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உரிய நோட்டீஸ் வழங்காமல் அல்லது காரணங்களுடன் கூடிய உத்தரவு பிறப்பிக்காமல் எந்தவொரு வாக்காளரின் பெயரும் பட்டியலிலிருந்து நீக்கப்படாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
ஒரே தொகுதியில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு எதிராக 32 படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதில் இரண்டு படிவங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கையெழுத்து இடம்பெற்றிருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும் புகார்களை ஆய்வு செய்து தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்திருந்தாலும், தவறுதலாக விடுபட்ட தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பதற்கான நடைமுறையைத் தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமை மிகவும் முக்கியமானது என்பதால், தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் நிர்வாகக் குறைபாட்டால் வாக்குரிமையை இழக்கக்கூடாது என்பதே இந்த உத்தரவின் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது.
