அண்டை நாடான பூடானில் பனிப்பாறை ஏரி உடைந்து பெருமளவு தண்ணீர் வெளியேறியதால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் அசாமில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் வசித்த சுமார் 12 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பூடானின் லெம்தாங் பகுதியில் அமைந்துள்ள ஷிண்டாபு ஏரியில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுமார் 74 லட்சம் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நீர்வரத்து மோ ஆற்றின் வழியாகச் சங்கோஷ் ஆற்றை அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சங்கோஷ் ஆறு மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில எல்லைப் பகுதிகளைக் கடந்து செல்வதால் அப்பகுதிகளில் வெள்ள அபாயம் உருவாகியுள்ளது.
பனிப்பாறை ஏரிகள் திடீரென உடைந்து பெருமளவு தண்ணீர் வெளியேறுவது GLOF எனப்படும் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளமாகும். இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவதாலும், ஏரிகளில் நீர் அளவு அதிகரிப்பதாலும் இத்தகைய சம்பவங்கள் ஏற்படுகின்றன. இந்த வெள்ளப்பெருக்கு திடீரென உருவாகக்கூடியது என்பதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் சங்கோஷ் ஆற்றை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். சிலர் தங்களது கால்நடைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளனர்.
அசாம் மாநிலத்தின் துப்ரி மற்றும் கோக்ராஜார் மாவட்டங்களில் உள்ள அபாயகரமான பகுதிகளையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆற்றின் நீர்மட்டம், கரையோரப் பகுதிகளின் நிலை, தாழ்வான குடியிருப்புகளில் வெள்ளநீர் புகும் வாய்ப்பு ஆகியவை தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன.
பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மக்களை எச்சரிப்பதற்கும் அவசரகால வெளியேற்றத்திற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இமயமலைப் பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரிப்பது மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக உருவாகும் இயற்கை அபாயங்கள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
